சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் சீனா! தைவான் கடும் கண்டனம்!
தைவான் நாட்டு கடல் பகுதியில் சீனா சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்கு அந்நாட்டின் கடலோரக் காவல் படை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தெற்கு சீனக் கடல் பகுதியிலுள்ள தைவான் நாட்டின் தோங்ஷா தீவுகளின் அருகில் கடந்த பிப்.15 அன்று சீனாவைச் சேர்ந்த 6 பெரிய கப்பல்களுடன் 29 மீன்பிடி படகுகள் சட்டவிரோதமாக மீன்பிடித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு சென்று தைவானின் கடலோரக் காவல் படையினர் அந்த படகுகளை அப்புறப்படுத்தியபோது சீன கடலோரக் காவல் படையின் கப்பல்கள் தைவானின் கடல் பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறப்படுகின்றது.
இதுகுறித்து தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், பிப்.15 சம்பவத்தைத் தொடர்ந்து தைவான் கடல் பகுதியில் சீனப் படகுகள் நுழைவதைத் தடுக்க கடந்த பிப்.26 அன்று தோங்ஷா தீவுகளை சுற்றி ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஸ்லோவாக்கியாவில் வேகமாக பரவும் தொற்று! எல்லைக் கட்டுப்பாடு விதித்த செக் குடியரசு!
இந்த நடவடிக்கையின் போது, சீனாவைச் சேர்ந்த ’யூயிராயு 23588’ என்ற மீன்பிடி படகை பிடித்தாகவும் ஆனால், அப்போது சீனக் கடலோரக் காவல் படையினர் மீண்டும் தலையிட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், சீனாவின் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மார்ச் 11,12 மற்றும் 18 ஆகிய நாள்களில் தொடர்ந்து நடைபெற்றதாகக் குறிபிடப்படும் நிலையில் இந்தத் தலையீடு தங்களது நாட்டின் இறையாண்மைக்கு ஒரு சவாலாகவுள்ளதாகக் கூறி தைவான் கடலோரக் காவல் படை கண்டித்துள்ளது.
முன்னதாக, தைவானின் தோங்ஷா தீவைச் சுற்றியுள்ள பகுதிகள் அந்நாட்டின் பாதுகாக்கப்பட்ட சரணாலயம் ஆகும் அப்பகுதியில் வர்த்தகம் மற்றும் தனிமனித ரீதியான மீன்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சீனாவின் கடல் வளம் தொடர்ச்சியான மீன்பிடிப்பினால் கடுமையாக பாதிப்படைந்துள்ளதினால் அந்நாட்டு மீனவர்கள் தைவான் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.