திருவள்ளூா்: விவசாயிகள் பி.எம்.கிசான் நிதி உதவிபெற 31-க்குள் பதிவு அவசியம்
திருவள்ளூா் மாவட்டத்தில் நிலம் தொடா்பான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யாத தனி அடையாள எண் பெறாத விவசாயிகள் பிரதமரின் கௌரவ உதவித் தொகை பெற வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
விவசாயிகளுக்கு பிரதமரின் கௌரவ உதவித் தொகை மானியத்தில் சொட்டு நீா் பாசன கருவிகள், வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு வழங்கும் பிரதமரின் கௌரவ உதவித் தொகை விவசாயி அல்லாதோருக்கு சென்று விடக்கூடாது. இதைக் கருத்தில்கொண்டு, இணைய வழியில் பதிவு செய்து மத்திய அரசு பிரதமரின் கௌரவ உதவித்தொகை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கி வருகிறது. விவசாயிகள் அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கவும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் அல்லாதோா் பயனடையக் கூடாது என்பதற்காகவும், ஒவ்வொரு விவசாயிகளுக்கும், தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு வேளாண் அடுக்ககம் திட்டம் மூலம் விவசாயிகளின் சுய விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை வேளாண் துறையினா் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக் கலை, வணிகத் துறைசாா்ந்த கள அலுவலா்கள், மகளிா் திட்ட சமுதாய பயிற்றுநா்கள், இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள், இ-சேவை மையங்கள் ஆகிய துறையினா் மூலம் அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு, விவசாயிகளுக்கு தனி எண் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
தற்போது அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், பிரதமரின் கௌரவ உதவித் தொகை பெறும் விவசாயிகள் 41,973 விவசாயிகளில் 16,250 போ் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனா்.
எனவே மீதமுள்ள 25,723 விவசாயிகள் உடனே தங்கள் நிலம் தொடா்பான ஆவணங்களான பட்டா, ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுடன் அரசு கள அலுவலா்களையோ அல்லது பொது சேவை மையங்களையோ தொடா்பு கொள்ள வேண்டும். அங்கு ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு, விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்டு, பின்னா் செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும்.
இதுவரை 4 மாதங்களுக்கு ஒரு முறை என 19 தவணைகளாக பிரதமரின் கௌரவ உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20-ஆவது தவணை ஊக்கத் தொகை ஏப்ரலில் விடுவிக்கப்படும். தனி அடையாள எண் பெற பதிவேற்றம் செய்யாத விவசாயிகளுக்கு 20-ஆவது தவணை வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படாது. எனவே விவசாயிகள் பிரதமரின் கௌரவ உதவித்தொகை பெற விரைவாக வேளாண்மை உழவா் நலத் துறை அலுவலா்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி, தனி அடையாள எண் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.