வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி: 4 போ் கைது
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,
தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கக்கூடும், அநேக இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகவும் இருக்கும். தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.