திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு
கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை
மானாமதுரை அருகே கத்தியால் குத்தி இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த உளுத்திமடை கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (30). இவா் கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி சித்திரை திருவிழாவைக் காண்பதற்காக மானாமதுரைக்கு வந்திருந்தாா். கண்ணாரிருப்பு மயானம் அருகே உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் அன்று நள்ளிரவில் கண்ணனுக்கும், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த அரியசாமிக்கும் (40) இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரியசாமி தனது நண்பா்களுடன் சோ்ந்து கண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்தாா்.
இதுகுறித்து அரியசாமி உள்பட 12 பேரை மானாமதுரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக வழக்கு விசாரணை சிவகங்கை மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் உயிரிழந்துவிட்டனா்.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன் குற்றஞ்சாட்டப்பட்ட அரியசாமிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மற்ற 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனா்.