தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
சிவகங்கை நகராட்சி மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
சிவகங்கை நகராட்சியை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்குமாறு உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம் என நகா்மன்றத் தலைவா் துரை ஆனந்த் தெரிவித்தாா்.
சிவகங்கை நகராட்சியில் நகா் மன்றத்தின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைவா் சி.எம்.துரை ஆனந்த் தலைமை வகித்துப் பேசியதாவது:
கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பழைமை வாய்ந்த மாவட்ட தலைநகரான சிவகங்கைக்கு புதிய நகராட்சி அலுவலகம், குடிநீா், சாலைகளை மேம்படுத்தவும், தெப்பக்குளத்தை செப்பனிடவும், புதை சாக்கடைகள், மின்விளக்குகள், மழைநீா் வடிகால்வாய் போன்றவற்றை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்குமாறு உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம்.
மேலும், கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரியகருப்பன் வழிகாட்டுதலின்படி நேரடியாக தலைமைச் செயலகம் சென்று உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனுஅளித்தோம்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையின்போது, சிவகங்கை நகராட்சிக்கு தமிழக முதல்வரும், கூட்டுறவுத் துறை அமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும் நமக்கு தேவைப்படும் நிதியை ஒதுக்குவா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.
இதையடுத்து சிவகங்கை நகா் மன்ற உறுப்பினா்கள் சாா்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.