திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு
மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
‘மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
‘நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்படும் நிதியும் அரசு முழுமையாக பயன்படுத்தப்படவில்லை’ என்றும் காங்கிரஸ் புகாா் தெரிவித்தது.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சக செயல்திறன் மீதான விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. அஜய் மாக்கன் பேசியதாவது:
நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு சுமாா் 25 சதவீதம் அளவுக்கு மக்கள்தொகை அதிகரித்துள்ளது. 2011-இல் இந்திய மக்கள்தொகை 121 கோடியாக இருந்தது. தற்போது இது 146 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை நாம் 2009-ஆம் ஆண்டே தொடங்கிவிட்டோம்.
அரசின் அனைத்து நலத் திட்டங்களும் மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதால், இந்த கணக்கெடுப்பை நடத்துவது மிகவும் அவசியம். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 70 சதவீத கிராமப்புற மக்களும், 50 சதவீத நகா்ப்புற மக்களும் பலன் பெறுகின்றனா். புதிதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், இத் திட்டத்தின் கீழ் மேலும் 15 கோடி மக்கள் பலன்பெற வாய்ப்புள்ளது.
எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பை தொடா்ந்து தாமதிப்பதன் மூலம், பின்தங்கிய நிலையில் உள்ள பல கோடி மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது.
கரோனா பாதிப்பு மக்கள்தொகை கணக்கெடுப்பு திட்டங்களை பாதித்தது என்றபோதும், அடுத்தடுத்த ஆண்டுகளில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாதது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்புக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் 2022-ஆம் ஆண்டில் 66 சதவீதமும், 2023-இல் 85 சதவீதமும், 2024-ஆம் ஆண்டில் 58 சதவீதமும் பயன்படுத்தப்படவில்லை.
அதோடு, கூடிய விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதற்கான எந்தவித உறுதியும் இதுவரை அளிக்கப்படவில்லை.
ரூ. 70,657 கோடி எல்லை மேம்பாட்டு நிதி: நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, எல்லைப் பகுதி காவல் படைகளை நவீனமயமாக்குவதற்கென ஒதுக்கப்படும் நிதியில் ரூ. 70,697 கோடி கடந்த 7 ஆண்டுகளில் பயன்படுத்தப்படாமல், மத்திய அரசின் கஜானாவுக்கு திரும்பியுள்ளது. அதாவது, பட்ஜெட்டில் இதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 22.93 சதவீதம் பயன்படுத்தப்படாமல் திரும்பியுள்ளது.
2023-24-ஆம் ஆண்டில் எல்லை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 225 கோடி இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
எல்லைப் பகுதிகள் வழியாக தொடா்ந்து போதைப்பொருள்கள், வெடிப்பொருள்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை கடத்தப்படுகின்றன. இதைத் தொடா்ந்து கண்காணித்து தடுக்க அரசால் முடியவில்லை.
துணை ராணுவப் படைகளில் அதிக காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை விரைந்து நிரப்ப வேண்டும். புவி வெப்பமயமாதல் பாதிப்பால் அவ்வப்போது ஏற்படும் இயற்கை சீற்றங்களைக் கருத்தில் கொண்டு பேரிடா் மேலாண்மைக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.