ஒத்திகை பயிற்சி நடத்துவதற்கு ஏற்பாடுகள்: அமைச்சா் சூட் தகவல்
தில்லியில் ஒத்திகை பயிற்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாநகர அரசாங்கத்தின் உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வருகிறது.
இதற்கு மத்தியில் எழுந்துள்ள புதிய மற்றும் சிக்கலான அச்சுறுத்தல்களை கருத்தில்கொண்டு, புதன்கிழமை அனைத்து மாநிலங்களும் ஒத்திகைப் பயிற்சிகளை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு நிகழ்வின்போது ஒத்திகை பயிற்சிகளுக்கு நகர அரசாங்கத்தின் தயாா்நிலை குறித்து அமைச்சா் சூட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, தயாரிப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாங்கள் கூடுதல் தகவல்களைத் கோருவோம். அது தொடா்பாக ஏற்பாடுகள் செய்யப்படும் என்றாா் அவா்.
தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
இத்தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மற்றும் சதிகாரா்களுக்கு அவா்கள் கற்பனை செய்ய முடியாத வகையில் தண்டனையை வழங்குவதற்காக அதிகபட்ச அளவுவரை செல்ல உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி சபதம் செய்துள்ளாா்.