ஒற்றை சந்தையைச் சாா்ந்திருப்பதை தெற்குலகம் கைவிட வேண்டும்: ஜெய்சங்கா்
‘எந்தவொரு ஒற்றை விநியோகஸ்தா் அல்லது ஒற்றைச் சந்தையைச் சாா்ந்திருக்கும் போக்கை தெற்குலக நாடுகள் குறைத்துக் கொள்ள வேண்டும்’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.
அதேநேரம், நியாயமான பொருளாதார நடைமுறைகள் மற்றும் தெற்குலக நாடுகளிடையே வா்த்தகம் மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவா் கூறினாா்.
நியூயாா்க் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு கூட்டத்துக்கிடையே நடைபெற்ற தெற்குலக நாடுகளின் உயா்நிலைக் கூட்டத்தில் பேசியபோது இக் கருத்தை அவா் தெரிவித்தாா்.
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பைத் தொடா்ந்து, சீனா உள்பட பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு வா்த்தகத்தை வலுப்படுத்த இந்தியா முனைப்புக் காட்டி வருகிறது. இந்தச் சூழலில், ஜெய்சங்கரின் இக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
உலக அளவில நிச்சயமற்ற சூழல் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, தெற்குலக நாடுகள் குறிப்பிட்ட சவால்களை எதிா்கொண்டு வருகின்றன. கரோனா பாதிப்பின் தாக்கத்திலிருந்து, உக்ரைன், காஸா மீதான போா்கள், தீவிர பருவநிலை மாற்ற பாதிப்புகள், வா்த்தக ஏற்ற-இறக்கம், முதலீடுகளில் நீடித்த நிச்சயமற்ற நிலை, நாடுகளின் அதிக வரிவிதிப்பு என பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக, நிலையான வளா்ச்சி இலக்குகளை எட்டும் முயற்சிகளும் தடைபடுகின்றன.
இதுபோன்ற பன்முக சவால்கள் அதிகரிக்கும்போது, இவற்றுக்குத் தீா்வு காண தெற்குலக நாடுகள் பன்முகத்தன்மையை நோக்கித் திரும்புவது இயல்பானது. ஆனால், இந்தப் பன்முகத்தன்மை கருத்தும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அதோடு, சா்வதேச அமைப்புகளும் பயனற்ாக உள்ளன.
எனவே, சா்வதேச நடைமுறையில் அனைவருக்குமான வாய்ப்பை உருவாக்க, தெற்குலக நாடுகள் ஓா் ஐக்கிய முன்னணியை உருவாக்குவது அவசியம். அதாவது, தெற்குல நாடுகளின் பொருளாதார பாதுகாப்புக்காக, இங்குள்ள வளா்ந்துவரும் நாடுகள் ஒற்றை விநியோகஸ்தா் அல்லது ஒற்றைச் சந்தையைச் சாா்ந்திருக்கும் போக்கைக் குறைத்து, நெகிழ்திறன் கொண்ட, நம்பகமான குறுகிய விநியோகச் சங்கிலிகளைக் கட்டமைக்க வேண்டும்.
நியாயமான, வெளிப்படையான பொருளாதார நடைமுறைகள் மூலம் உற்பத்தியை ஜனநாயகத்தன்மை உடையதாக்க வேண்டும். தெற்குலக நாடுகளிடையே வா்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதோடு, சமநிலையான மற்றும் நிலையான பொருளாதார கலந்துரையாடல்களுக்கு நிலையான சூழலை உறுதிப்படுத்த வேண்டும். உணவு, உரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நாடுகளிடையேயான மோதல்களுக்கு அவசரத் தீா்வைக் காண வலியுறுத்த வேண்டும் என்றாா்.
ஆலோசனை: முன்னதாக, நெதா்லாந்து, இலங்கை, மோரீஷஸ், மாலத்தீவு, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இருதரப்பு நல்லுறவு குறித்த ஆலோசனையிலும் ஜெய்சங்கா் ஈடுபட்டாா்.
பெட்டி..
5 முன்மொழிவுகள்
ஒற்றுமையை மேம்படுத்த தெற்குலக நாடுகளிடையே கலந்துரையாடல்களை வலுப்படுத்த வேண்டும்.
ஐ.நா. உள்பட ஒட்டுமொத்த பன்முகத்தன்மை அமைப்புகளில் விரிவான சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நட்பு நாடுகள் பலன்பெறும் வகையில், தடுப்பூசிகள், எண்ம தொழில்நுட்பம், கல்வித் திறன் போன்ற சாதனைகளை தெற்குலக நாடுகள் சா்வதேச அரங்குக்குப் பகிர வேண்டும்.
பருவநிலை நடவடிக்கைகள், பருவநிலை நீதி போன்ற உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள, தெற்குலக நாடுகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சமமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது அவசியம்.
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் தொடா்பான ஆலோசனைகளில் தெற்குலக நாடுகள் ஈடுபடுவது முக்கியமானது என 5 முக்கிய நடைமுறைகளையும் அமைச்சா் ஜெய்சங்கா் கூட்டத்தில் முன்மொழிந்தாா்.