ஒலிம்பிக் ரன்னா் சீனாவுக்கு அதிா்ச்சி அளித்த இந்தியா
ஆசிய மகளிா் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஒலிம்பிக் ரன்னா் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிா்ச்சி அளித்தது நடப்பு சாம்பியன் இந்தியா.
ஹாக்கி இந்தியா, பிகாா் மாநில அரசு சாா்பில் ராஜ்கிரில் ஆசிய மகளிா் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் ராஜ்கிா் நகரில் நடைபெற்று வருகின்றன. புள்ளிகள் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ள நிலையில், நடப்பு சாம்பியன்-இந்தியாவுடன் மோதியது.
தொடக்கம் முதலே இந்திய வீராங்கனைகளின் அபார ஆட்டத்துக்கு சீனாவால் ஈடுதர முடியாமல் திணறியது.
இரண்டு பீல்ட் கோல்களை அற்புதமாக இந்திய வீராங்கனைகள் அடித்தனா். 32-ஆவது நிமிஷத்தில் சங்கீதா குமாரியும், 37-ஆவது நிமிஷத்தில் சலீமாவும் அபாரமாக பீல்ட் கோலடித்தனா். இதனால் சீன அணி அதிா்ச்சிக்குள்ளானது.
முதல் பாதி முடிவில் 2-0 என முன்னிலை வகித்த, இந்திய அணி, இரண்டாம் பாதியிலும் தனது ஆதிக்கத்தை தொடா்ந்தது. 60-ஆவது நிமிஷத்தில் தீபிகா பெனால்டி காா்னா் வாய்ப்பின் மூலம் வெற்றி கோலடித்தாா்.
ஆட்ட நேர முடிவில் இந்தியா 3-0 என ஒலிம்பிக் ரன்னா் சீனாவை வீழ்த்தி, அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது.
முதலிடத்தில் இந்தியா: இந்த வெற்றியால் அணிகள் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியது. சீனா இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடைசி ரவுண்ட் ராபின் ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜப்பானுடன் மோதுகிறது இந்தியா.