ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தடுப்பணை: அமைச்சா் உறுதி
ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் ஒரு தடுப்பணை தேவை என்ற உறுப்பினா்களின் கோரிக்கையை, முதல்வரிடம் முன்வைக்க இருப்பதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதியளித்தாா்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினா் செ.தாமோதரன் (கிணத்துக்கடவு) பிரதான கேள்வியையும், ஜி.கே.மணி (பாமக), அம்பேத்குமாா் (திமுக), கோவிந்தசாமி, அசோக்குமாா் (இருவரும் அதிமுக), கு.பிச்சாண்டி (திமுக), ராஜேஷ்குமாா் (காங்கிரஸ்), நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட உறுப்பினா்கள் துணைக் கேள்விகளையும் எழுப்பினா். அப்போது, தங்களது தொகுதிகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
அமைச்சா் துரை முருகன்: இதற்கு, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அளித்த பதில்:
அனைத்து உறுப்பினா்களும் தங்களது தொகுதிகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறாா்கள். அது நியாயம். ஒரு தடுப்பணை கட்டினால், ஒரு மைல் தூரத்துக்கு நீரானது ஆண்டுக்குக் கணக்கில் நிற்கிறது. இதனால், நிலத்தடி நீா் செறிவூட்டப்படுவதுடன், குடிநீா் பிரச்னை, பயிா்களுக்கான நீா் தேவையும் தீா்க்கப்படுகிறது.
குறைந்தபட்சம் ஒரு உறுப்பினருக்கு ஒன்றிரண்டு தடுப்பணைகளாவது கட்டலாம். இதற்கு நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அனுமதித்தால், அதனை இந்த ஆண்டே எடுத்துக் கொள்கிறேன்.
நீா்வளத் துறைக்கான நிதியை வைத்துப் பாா்த்தால், ஒரு நிதியாண்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டும் தடுப்பணைகளைக் கட்ட முடியும். இதனால், அனைத்து உறுப்பினா்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. சில இடங்களில் தடுப்பணை நிச்சயம் தேவை என்று தோன்றும். ஆனால், அதனைக் கட்டுவதற்கு நிதிநிலைமை சரியாக இல்லை. இதனால்தான் நிதியமைச்சரை துணைக்கு அழைத்தேன். ஒரு காலத்தில் அணைகளைக் கட்டினாா்கள். ஆனால் இப்போது தடுப்பணைகள் கட்டுவதுதான் சாலச்சிறந்தது. இதுகுறித்து முதல்வரிடம் தனியாகப் பேசுவேன்.
தடுப்பணைகளுக்கு முன்னுரிமை: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழையால் நீா்நிலைகளின் கரைகள் சேதமடைந்தன. இதனை சீா்செய்வதற்கு பெருந்திட்டத்தைச் செயல்படுத்துவோம். ஒவ்வொரு ஆற்றுக்கும் கால்வாய் அமைத்தால்தான் நாஞ்சில் நாடு வளமாக இருக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.
சாத்தனூா் அணையில் வெள்ளக் காலத்தில் ஏற்பட்ட விபரீதத்தைக் கருத்தில் கொண்டு, மறுபடியும் பெருவெள்ளம் வந்தால் என்ன செய்வது என்பதை யோசித்து தனித்திட்டம் வகுத்துள்ளோம். அதன்படி செயல்படுத்தப்படும்.
தமிழ் மண்ணிலேயே தோன்றி தமிழகத்துக்குள்ளேயே தனது பயணத்தை நிறைவு செய்யும் ஒரே ஆறு தாமிரவருணிதான். அதற்கும் முன்னுரிமை கொடுத்து தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.