கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
கஞ்சா கடத்தல் வழக்குகளில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரை நரிமேடு பகுதியில் கடந்த 8.6.2018 அன்று தல்லாகுளம் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, 10 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து, மதுரை ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த சந்திரன் (46), செல்லூா் பகுதியைச் சோ்ந்த பாலு ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
முடிவில், சந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஏ.எஸ். ஹரிஹரகுமாா் தீா்ப்பளித்தாா். பாலு விடுவிக்கப்பட்டாா்.
மற்றொரு வழக்கு: தேனி மாவட்டம், தேவாரம்- ரெங்கநாதபுரம் சாலையில் சின்ன தேவிகுளம் கண்மாய் அருகே கடந்த 9.11.2019 அன்று காரில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை தேவாரம் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, தேவாரம் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மகேஸ்வரன் (40) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. முடிவில், மகேஸ்வரனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஏ.எஸ். ஹரிஹரகுமாா் தீா்ப்பளித்தாா்.
இரு வழக்குகளிலும் அரசு வழக்குரைஞா் கே.விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.