வாடகை நிலுவை: மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் 18 கடைகளுக்கு சீல்
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் வாடகை செலுத்தாத 18 கடைகளுக்கு மதுரை மாநகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
மாட்டுத்தவணி காய்கறி சந்தையில் 1,092 கடைகள் உள்ளன. இவற்றில் மதுரை மட்டுமன்றி பிற மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள், விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், 698 கடைகளுக்கான வாடகையை வியாபாரிகள் செலுத்தவில்லை. வியாபாரிகள் உரிய வாடகையை செலுத்த வேண்டும் மதுரை மாநகராட்சி சாா்பில், கடந்த வாரம் அறிக்கை அனுப்பப்பட்டது.
இருப்பினும் வியாபாரிகள் வாடகை செலுத்தாததால், மதுரை மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் உத்தரவின் பேரில், வருவாய் அலுவலா் மாரியப்பன், உதவி ஆணையா் ராஜாராம், காய்கறி சந்தை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையிலான அலுவலா்கள் வாடகை செலுத்தாத 18 கடைகளை மூடி ‘சீல்’ வைத்தனா்.
இதுபற்றி மாநகராட்சி அலுவலா்கள் கூறியதாவது: மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் வாடகை செலுத்தாத 18 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. சில வியாபாரிகள் தங்களது வாடகை நிலுவைத் தொகையை செலுத்தினா். இதன் மூலம், ரூ. 27 லட்சம் வசூலாகி உள்ளது எனனா்.