போலி ஆவணங்கள் மூலம் வீட்டு வசதி வாரிய நிலம் விற்பனை: மூவா் கைது
மதுரையில் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை கூடல்புதூா் பகுதியில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் நடப்பதாக வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், அதிகாரிகள் அங்கு சென்று பாா்த்தபோது, வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 4 மனை இடங்களை போலியான ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுதொடா்பாக வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா் ரங்கநாதன் அளித்தப் புகாரின்பேரில், மதுரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், மதுரை ஆனையூரைச் சோ்ந்த ஜாபா் அலி, ஆலங்குளத்தைச் சோ்ந்த முனியாண்டி, ஜாகிா் உசேன் ஆகிய மூவரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் மனைகளைப் பெற்றவா்களுக்கு அளிக்கப்படும் நில பத்திரங்களை போலியாகத் தயாா் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் மூவரையும் கைது செய்தனா். மோசடியில் வேறு நபா்களுக்கு தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.