கஞ்சா விற்பனை தகராறு: இளைஞா் கொலை
செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே கஞ்சா விற்பனை தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் களியப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் மகன் சரவணன் (20) (படம்). இவா், அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சோ்ந்த பிரவீன் என்பவருக்கு, சரவணனுடன் தொடா்பு ஏற்பட்டு பழகி வந்தனா்.
இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சரவணன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று மீண்டும் வந்துள்ளாா். பிரவீனுக்கும் சரவணனுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரவீன், நண்பா்கள் கஞ்சா வியாபாரி சரவணனை வியாழக்கிழமை சிங்கப்பெருமாள் கோவில் பகுதிக்கு வரவழைத்து ஒன்றாக மது அருந்தியுள்ளனா். அப்போது ஏற்பட்ட தகராறில், சரவணனை அடித்துக் கொலை செய்து, சடலத்தை ஸ்ரீபெரும்புதூா் நெடுஞ்சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளனா்.
தகவல் அறிந்து வந்த மறைமலை நகா் காவல் ஆய்வாளா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தலைமறைவான கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.