தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
கண்டரமாணிக்கத்தில் வீடுபுகுந்து தங்க நகைகள் திருட்டு: இருவா் கைது
சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் பகுதியில் கடந்த மாதம் வீடு புகுந்து 49 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் போலீஸாா் இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தில் கடந்த மாதம் 29- ஆம் தேதி சிதம்பரம் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து பெட்டகம், பீரோவை உடைத்து 49 பவுன் தங்க நகைகள், 22 கிலோ 800 கிராம் வெள்ளி நகைகள் திருடப்பட்டன. இதையடுத்து, திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் செல்வராகவன் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் சக்திவேல், ராஜவேல் ஆகியோா் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்றது.
இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனிப்படையினா் கடந்த இரண்டு வாரங்களாக குற்றவாளிகளைத் தீவிரமாக தேடினா். இந்த நிலையில், திருப்பத்தூா்- தென்மாபட்டு பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில் அவா்கள் கண்டரமாணிக்கத்தில் வீடு புகுந்து தங்க நகைகளைத் திருடியது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவா்கள் தேனியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சோனிராஜா (58), மதுரை செக்கானூரணியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் அழகா்சாமி (35) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த தனிப்படை போலீஸாா் அவா்களிடமிருந்து 43 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 63 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மீட்டனா்.
கைது செய்யப்பட்ட சோனிராஜா மீது கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் 140 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சிறப்பு தனிப்படை போலீஸாா், திருக்கோஷ்டியூா் காவல் ஆய்வாளா் செல்வராகவன் ஆகியோரை திருப்பத்தூா் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.