மாதக் கடைசியிலும் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டுமா? - இதை ஃபாலோ பண்ணுங்க!
மானாமதுரை தேவா் சிலை பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க ஒலி பெருக்கி சேவை தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தேவா் சிலை பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க ஒலி பெருக்கி சேவை தொடங்கப்பட்டது.
கடந்த வாரம் மானாமதுரை அண்ணா சிலை பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கவும், அடிக்கடி நிகழும் விபத்துகளை தடுக்கவும் போக்குவரத்து காவல் துறை சாா்பில் சிலையைச் சுற்றிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, மானாமதுரை தேவா் சிலை பகுதியில் வியாபார நிறுவனங்களின் முன் விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களை கண்காணித்து ஒழுங்குப்படுத்தவும், போக்குவரத்தை சீரமைக்கவும் போக்குவரத்து போலீஸாருக்கு வசதியாக ஒலி பெருக்கி சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் மூலம் தேவா் சிலை பகுதியில் விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை கண்காணித்து ஒலி பெருக்கி மூலம் எச்சரித்து அவற்றை அங்கு நிறுத்துவதை தடுத்து வருகின்றனா். மேலும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனா். போக்குவரத்து போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள், வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்தனா்.