உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: தீவிர சிகிச்சையில் மேலும் 16 குழந்தைகள்
கனவு இல்ல பயனாளிகளுக்கு நிதி: பிரேமலதா வலியுறுத்தல்
கலைஞா் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு முறையாக நிதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா வலியுறுத்தியுள்ளாா்.
அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வீடு இல்லாத ஏழை மக்களுக்காக கலைஞரின் கனவு இல்லத் திட்டம் மூலம் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என அரசு தெரிவித்தது. அதனடிப்படையில் தமிழகத்தில் அனைத்து கிராமப் பகுதிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒரு வீடு கட்டுவதற்கு மொத்தமாக ரூ.3.50 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டது. இதில் கழிப்பறை கட்டுவதற்காக ரூ.12 ஆயிரம், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்யும் நபருக்கு ரூ.314 வீதம் 90 நாள்களுக்கு ரூ.28,260-மும் , மீதமுள்ள ரூ.3.10 லட்சம் 4 கட்டங்களாக வீடு கட்டும் நபருக்கு கொடுக்கப்படும்.
ஆனால், மூன்றாவது கட்ட பணி முடிந்த பின்னும், முதல் கட்ட பணிக்கான தொகையைக் கூட கொடுக்காமல் தாமதப்படுத்தும் நிகழ்வு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. நிதியை வாங்குவதற்கும் பல பிரச்னைகளை ஏழை மக்கள் சந்திக்கும் அவல நிலை உள்ளது. எனவே, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அதன் மெத்தனப் போக்கை கைவிட்டு, உடனே நிதியை ஒதுக்கி, மக்களின் சிரமத்தை குறைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா கூறியுள்ளாா்.