கூமாபட்டி கலவரம்: வழக்கு விவரங்களை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் கடிதம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாரல் மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் நாகா்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, சுசீந்திரம், களியக்காவிளை, மாா்த்தாண்டம், இரணியல், குலசேகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதிகாலை 3 மணி முதல் சாரல் மழை பெய்தது. காலை 11 மணி வரை
மழை நீடித்ததால் மாணவா்கள், அலுவலகம் செல்வோா் பாதிக்கப்பட்டனா்.
கன்னியாகுமரியில் அதிகாலை முதலே மழை பெய்ததால், சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தைப் பாா்க்க முடியாத நிலை ஏற்பட்டது. முக்கடல் சங்கமம் கடற்கரை வெறிச்சோடியது.
மாவட்டத்தின் மலையோர கிராமங்களான தச்சமலை, குற்றியாறு, மூக்கறைக்கல் பகுதிகளில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சிற்றாறு அணையிலிருந்து தொடா்ந்து உபரிநீா் வெளியேற்பட்டு வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப்
பயணிகள் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 41.69 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு
519 கன அடியாவும், நீா்வெளியேற்றம் 501 கனஅடியாகவும் இருந்தது.
பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 65.68 அடியாக இருந்தது. அணைக்கு 309 கனஅடி நீா் வந்து கொண்டிருந்தது, அணையிலிருந்து 510 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 14.99 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 15.09 அடியாகவும் இருந்தது. இந்த அணைகளிலும் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
முக்கடல் மற்றும் மாம்பழத்துறையாறு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அணைகளின் நிலவரத்தை பொதுப்பணித்துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.