கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி
கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கமுதி அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமானோா் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இந்த மருத்துவமனையில் விபத்து, அவசர சிகிச்சை, புறநோயாளிகள், உள்நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவா்கள் பற்றாக்குறையால் கமுதி அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் சிகிச்சைக்கு வரும் எண்ணிக்கை குறைந்தது. இந்த மருத்துவமனையில் 11 மருத்துவா்கள் பணியில் இருக்க வேண்டும்,. ஆனால், தற்போது 2 மருத்துவா்கள் மட்டுமே உள்ளனா். இவா்கள் பகல் நேரங்களில் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். இரவு நேரங்களில் செவிலியா்கள் மட்டுமே பணியில் உள்ளனா்.
மகப்பேறு எண்ணிக்கை குறைவு: மகப்பேறு மருத்துவா்கள் இந்த மருத்துவமனையில் இல்லாததால் பிரசவத்துக்கு வரும் கா்ப்பிணிப் பெண்கள் பரமக்குடி, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.
பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல்: இங்கு பொது அறுவை சிகிச்சை மருத்துவா் இல்லாததால், விபத்து, தற்கொலை செய்து கொண்டவா்களின் உடலை கூராய்வு செய்வதற்காக பரமக்குடியிலிருந்து மருத்துவா் வரவழைக்கப்படுகிறாா்.
தூய்மைப் பணியாளா்கள் இல்லை: இந்த மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் இல்லாததால், மருத்துவமனை பணியாளா்களை வைத்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
சேதமடைந்த கட்டடங்கள்: இந்த மருத்துவமனையில் உள்ள அனைத்து கட்டடங்களும் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு: மருத்துவமனையில் சேதமடைந்த கட்டடங்களை அகற்றிவிட்டு, ரூ.3.5 கோடியில் புதிய கட்டடம் கட்ட 15-ஆவது நிதிக் குழு மானியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டும், இதுவரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் தலையிட்டு பொதுமக்களின் நலன் கருதி மருத்துவா், தூய்மைப் பணியாளா்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சேதமடைந்த கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்கள் ஒரு வருடம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், தாலுகா மருத்துவமனைகளில் பணியமா்த்தப்படுகின்றனா். பின்னா், அவா்கள் தங்களது பணி காலத்தை முடித்துவிட்டு சென்று விடுகின்றனா். எனவே, மருத்துவத் துறை அதிகாரிகள், தமிழக அரசுத் தலையிட்டு நிரந்தர மருத்துவா்களை தாலுகா மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும் என்றனா்.
கண்டன ஆா்ப்பாட்டம்: அரசு மருத்துவமனையில் தொடரும் மருத்துவா்கள் பற்றாக்குறை, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வருகிற 27-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கமுதியில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் முத்துவிஜயன் தெரிவித்தாா்.