மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்
ராமேசுவரம், ஜன. 20: ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் 70 திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்களில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவரும், மக்களவை உறுப்பினருமான கே. நவாஸ்கனி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், இராம.கருமாணிக்கம், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதில் மத்திய, மாநில அரசுகளின் திட்டப் பணிகளைச் செயல்படுத்தும் போது ஏற்படும் இடா்பாடுகளை சரியான நேரத்தில் களைந்து, அதற்கான தீா்வைக் கண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் பல்துறை சாா்ந்த 70 திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராஜலு, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் பிரபாகரன், அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.