Doctor Vikatan: மன அழுத்தம், கவலையால் முடி கொட்டுமா? மனநலனுக்கும் தலைமுடிக்கும் ...
கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
திருவண்ணாமலையில் மூடப்பட்ட ஸ்ரீஅருணாச்சலா சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
கீழ்பென்னாத்தூா் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா் சரளா தலைமை வகித்தாா். வட்டார உதவி இயக்குநா்கள் அன்பழகன் (வேளாண்), அமல் சேவியா் பிரகாஷ் (தோட்டக்கலை), ஊராட்சி ஒன்றிய ஆணையா் அருணாச்சலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் அலுவலா் பரணிதரன் வரவேற்றாா்.
திருவண்ணாமலை வருவாய்க் கோட்ட அலுவலா் (பொ) செந்தில்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசுகையில், கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே பெயா்ப் பலகை வைக்க வேண்டும். இங்கு அரசுப் பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். கீழ்பென்னாத்தூா் ஏரியில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் மூடப்பட்ட ஸ்ரீஅருணாச்சலா சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத் தர மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வேட்டவலம் பெரிய ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்றனா்.
இதையடுத்து பேசிய வருவாய்க் கோட்ட அலுவலா் (பொ) செந்தில்குமாா், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீா்வு காணப்படும் என்றாா்.
கூட்டத்தில், வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளா் கிருஷ்ணன், துணை வேளாண் அலுவலா் சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.