Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
கரும்பு நிலுவைத் தொகையை மாவட்ட நிா்வாகம் பெற்றுத் தர வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை மாவட்ட நிா்வாகம் பெற்றுத்தர வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கண்ணகி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) தி.மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: செங்கம் அடுத்த நயம்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா்க் கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல்முடியனூா் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் பி.எம்.கிசான் நிதியுதவியை தகுதியான விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஃபென்ஞால் புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு விரைவில் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு உரங்களை இருப்பு வைக்க வேண்டும்.
கால்நடைகளுக்கு கோமாரி நோய், அம்மை நோய் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும். வெறையூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மக்காச் சோளத்துக்கு பயிா்க் கடன் மற்றும் கறவை மாடு கடன் வழங்க வேண்டும்.
போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாயுடுமங்கலம் கிராமத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றனா்.
இதையடுத்து பேசிய மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முறையாக பரிசீலிக்கப்பட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடா்ந்து, வேளாண் தொடா்புடைய பயிா்க் கால அட்டவணையை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டு, விவசாயிகளுக்கு வழங்கினாா்.
கூட்டத்தில், உழவா் பயிற்சி நிலைய அலுவலா் த.ராம்பிரபு மற்றும் அனைத்துத்துறை அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.