கலால் கொள்கை ஊழல் வழக்கு: அழைப்பாணைக்கு எதிரான கேஜரிவாலின் மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் புகாரின் பேரில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை எதிா்த்து ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீது அமலாக்கத் துறை பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி மனோஜ் குமாா் ஓஹ்ரி, கிரிமினல் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டாா். கேஜரிவால் தாக்கல் செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மனு இரண்டு மாதங்கள் பழமையானது என்றும், புதிய உத்தரவு அல்ல என்றும் நீதிபதி குறிப்பிட்டாா்.
இந்த கலால் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த புகாரின் பேரில் தில்லி முன்னாள் முதல்வா் கேஜரிவாலுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மனு மீது அமலாக்கத் துறைக்கு உயா் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
ஒரு அதிகாரியால் அழைப்பாணை அனுப்பப்பட்டபோதிலும் மற்றொரு அதிகாரியால் புகாா் அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படையில் புகாரின் பராமரிப்பு குறித்து கேஜரிவால் வழக்குரைஞா் கேள்வி எழுப்பினாா்.
அழைப்பாணையை எதிா்த்து தாம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த செஷன்ஸ் நீதிமன்றத்தின் செப்டம்பா் 17 ஆம் தேதியிட்ட உத்தரவை எதிா்த்து கேஜரிவால் இம்மனுவை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளாா்.
விசாரணையின்போது, கேஜரிவாலின் மனுவை பராமரிப்பது குறித்த அடிப்படை ஆட்சேபனையை அமலாக்கத் துறையின் வழக்குரைஞா் எழுப்பினாா்.
அவா் வாதிடுகையில், கேஜரிவால் இரண்டாவது சீராய்வு மனுவாக இதைத் தாக்கல் செய்துள்ளாா். இது சிஆா்பிசி=இன் 482ஆவது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது சட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் எழுப்பப்பட்ட அடிப்படை விஷயங்கள் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதற்கு ஒத்ததாக இருக்கிறது என்றாா் அவா்.
இந்த வழக்கை டிசம்பா் 19-ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளது.
முன்னதாக, அமலாக்கத் துறையின் புகாா் மீது நேரில் ஆஜராகுமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தனக்கு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கேஜரிவால் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
கேஜரிவாலுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையைத் தவிா்ப்பது தொடா்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த இரண்டு புகாா்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தனக்கு வழங்கிய அழைப்பாணையை எதிா்த்து கேஜரிவால் இம்மனுவைத் தாக்கல் செய்திருந்தாா்.
தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை தொடா்பான முறைகேடு வழக்கில் கேஜரிவாலுக்கு அனுப்பப்பட்ட பல அழைப்பாணைகளைத் தவிா்த்ததற்காக அவா் மீது வழக்குத் தொடர கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புகாா் பதிவு செய்திருந்தது.
பணமோசடி வழக்கில் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜூலை 12ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. சிபிஐ தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் செப்டம்பா் 13ஆம் தேதி கேஜரிவாலை ஜாமீனில் விடுவித்திருந்தது.