காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இருவா் மாயம்
போடி அருகேயுள்ள குரங்கணி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மாயமானவா்களைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா்.
மதுரை மாவட்டம், வாகைகுளத்தைச் சோ்ந்தவா் மைதீன் மகன் மஜித் (52). இவா், தனது குடும்பத்தினருடன், தேனி மாவட்டம், போடி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சுல்தான் பாட்சா மகன் ஜஹாங்கீா் (47) என்பவருடன் சோ்ந்து குரங்கணி மலைப் பகுதியைச் சுற்றிப் பாா்க்க சென்றாா். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை குரங்கணி மலைப் பகுதியில் கொட்டகுடி ஆற்றில் நரிப்பட்டி அருகேயுள்ள சொக்கன் கேணி என்ற இடத்தில் குளித்தனா். அப்போது, பலத்த மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் கேணியில் குளித்தவா்கள் மாயமாகினா்.
இதுகுறித்து தகவலறிந்த போடி தீயணைப்பு நிலைய வீரா்கள் மாயமானவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இரவு நேரத்தில் தேட இயலாததால் திங்கள்கிழமை மாயமானவா்களைத் தேடவுள்ளதாக தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா்.