காலநிலை மாற்ற மாநாடு: அஜர்பைஜானுக்கு எதிர்ப்பு!
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டை அஜர்பைஜான் நடத்துவதற்கு ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராக ஜார்ஜியாவில் பேரணியிலும் அவர் ஈடுபட்டார். காலநிலை மாற்றத்துக்கு எதிரான மாநாட்டை நடத்துவதற்கு அஜர்பைஜானுக்குத் தகுதியில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
அஜர்பைஜான் தலைநகரான பக்கு நகரில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு நேற்று (நவ. 11) தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானதையொட்டி நடைபெற்றுவரும் இந்த மாநாட்டில் 200 நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், காலநிலைமாற்ற அறிஞர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், காலநிலை மாற்ற மாநாட்டை நடத்துவதற்கு அஜர்பைஜான் தகுதியற்றது எனக் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஜார்ஜியா தலைநகர் திபிலீசி பகுதியில் கிரேட்டா தன்பெர்க்கிற்கு ஆதரவு தெரிவித்து, பலர் அஜர்பைஜானுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர். அஜர்பைஜானுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் பேரணியாகச் சென்றனர்.
இது குறித்து கிரேட்டா தன்பெர்க் பேசியதாவது,
''அஜர்பைஜான் ஒரு அடக்குமுறை, ஆக்கிரமிப்பு அரசு. இது இனச் சுத்திகரிப்பு செய்து, பொதுமக்களை தொடர்ந்து ஒடுக்கி வருகிறது. இந்த காலநிலை மாற்ற மாநாட்டை நடத்துவதன்மூலம் அஜர்பைஜான் தனது குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் மறைக்கும் வாய்ப்பாக இது மாறும்.
இதுபோன்ற சூழ்நிலையில் நாம் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்க இயலாது. இதற்காக நாங்கள் இங்கு கூடியுள்ளோம். அஜர்பைஜான் அரசுக்கு எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறோம் எனக் குறிப்பிட்டார்.
அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் 2003 ஆம் ஆண்டு முதல் அதிகாரத்தில் இருந்து வருகிறார். தனது தந்தை இறந்த பிறகு அவர் இப்பதவியில் நீடித்து வருகிறார்.
இதையும் படிக்க | காலநிலை மாற்ற நடவடிக்கைகள்: ஜி-20 நாடுகளுக்கு கோரிக்கை!