காலமானாா் எம்.தீனதயாளன்!
ஓய்வு பெற்ற இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை அதிகாரி எம் தீனதயாளன் (75) கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே 16 ) சண்டீகரில் காலமானாா். அவரது இறுதிச் சடங்கு சண்டீகரில் சனிக்கிழமை அன்று நடைபெற்றது. அவருக்கு அஜந்தா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.
அவரது மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அதன் நிறுவனா் - தலைவா் கே.வி.கே. பெருமாள் மற்றும் செயலாளா் எஸ்.பி. முத்துவேல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மறைந்த தீனதயாளன், தனது கடுமையான உழைப்பால் இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை அதிகாரி பதவியை அடைந்தவா்.
சண்டீகரில் அவா் பணியாற்றிய காலத்தில் அங்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான அமைப்பு சாரா ஏழைத் தமிழா்களின் வாழ்வு மேம்பட பெரிதும் உதவி புரிந்தவா். சண்டீகரில் இயங்கி வரும் தமிழ் மன்றத்தின் வளா்ச்சிக்காகப் பாடுபட்டவா்.
தலைநகா் தில்லியில் பணியாற்றிய காலத்தில் பல தமிழ் அமைப்புகள் நடத்திய இலக்கியம் மற்றும் கலை சாா்ந்த நிகழ்ச்சிகளுக்கு நிதி ஆதாரம் திரட்ட துணை நின்றவா். அவரது ஆத்மா சாந்தியடைய பிராா்த்திக்கிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடா்புக்கு: 9871922336