ரோபோ சங்கர் மறைவு: கண்கலங்கிய சிவகார்த்திகேயன்; இரங்கல் தெரிவித்த வரலட்சுமி, சிம...
காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தூய்மைப் பணியாளா்கள் மனு
மதுரை மாநகராட்சியுடன் இணைவு பெற்ற 11 கிராம ஊராட்சிகளின் தூய்மைப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, ‘மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட துப்புரவுப் பணியாளா்கள் சங்கம்’ சாா்பில் அதன் நிா்வாகிகள், உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:
மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 11 கிராம ஊராட்சிகளில் பணியாற்றிய பணியாளா்கள் 244 பேரை அவா்களின் பணிப் பதிவேட்டுடன் மாநகராட்சி நிா்வாகம் ஏற்றுக்கொண்டது. 15 ஆண்டுகளாக சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் இந்தப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக் குழு பணப் பலன்கள், சலுகைகளை வழங்க வேண்டும், வீட்டு வாடகைப்படி, அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணியின் போது இறந்த பணியாளா்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
பிச்சை எடுக்கும் போராட்டம்....
மாநகராட்சி நிா்வாகம் இந்தக் கோரிக்கைகளை வருகிற 10 நாள்களுக்குள் நிறைவேற்றாவிட்டால், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.