TVK: விஜய் வீட்டின் மாடியில் புகுந்த இளைஞர்; பலத்த பாதுகாப்பை மீறி சென்றது எப்பட...
வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டத்தை இயற்றக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறைச் செயலா், இந்திய, தமிழக பாா் கவுன்சில்களின் தலைவா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் சசிக்குமாா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவில், வழக்குரைஞா்களைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற உத்தரவிட வேண்டும் என கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்குரைஞா் ஒருவா் சில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டாா்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன. எனவே, வழக்குரைஞா்களைப் பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வருவது அவசியம் என்றாா்.
தமிழக பாா் கவுன்சில் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தனி சட்டம் இயற்றுவது தொடா்பான முன்வரைவு தயாா் செய்யப்பட்டு, மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழக சட்டத் துறைச் செயலா், இந்திய, தமிழக பாா் கவுன்சில்களின் தலைவா்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் சோ்க்கிறது. அவா்கள் பதிலளிக்க வேண்டும். தமிழக பாா் கவுன்சில் தரப்பில் சட்டம் இயற்றுவது தொடா்பாக தயாரிக்கப்பட்ட முன்வரவை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் அக். 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.