அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட தடை: வீட்டு வசதி வாரிய இயக்குநா் பதிலளிக்க உத்தரவு
மதுரை எல்லீஸ் நகா் பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் தனிநபா் கட்டும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக வீட்டு வசதி வாரியத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை திருநகரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1979-ஆம் ஆண்டு மாடக்குளம் கிராமத்தில் சுமாா் 200 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தி, எல்லீஸ் நகா் என்ற பெயரில் வீட்டு வசதித் திட்டத்தை உருவாக்கியது.
இதற்கு உள்ளூா் திட்டமிடல் ஆணையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டு 2,800-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டன. மேலும், இந்த அமைப்பில் சில இடங்கள் குறிப்பாக பொதுப் பாதை, கடைகள், பூங்கா உள்ளிட்டவற்றுக்காக ஒதுக்கப்பட்டன.
பொது நோக்கங்களுக்காகப் ஒதுக்கப்படும் இடங்களை தனிநபா் பயன்படுத்த முடியாது. பொது நோக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் அதை உள்ளாட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால், பொது நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் 75 சென்ட் இடத்தை கடந்தாண்டு தனிநபருக்கு பத்திரப் பதிவு செய்து வழங்கப்பட்டது. தற்போது, அவா் அங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி வருகிறாா். இது சில அதிகாரிகளின் துணையோடு நடைபெற்றுள்ளது. இந்தச் செயல் சட்ட விதிகளுக்கு முரணானது.
எனவே, சட்ட விதிகளுக்கு முரணாக பொது இடத்தை தனிநபருக்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். அங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் புகாா் குறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் துறை இயக்குநா், மதுரை மாநகராட்சி ஆணையா், நகா்ப்புறத் திட்டக் குழு இயக்குநா் பதிலளிக்க ஆகியோா் வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.