திட்டக்குடி நகா்மன்றத் தலைவி தா்னா
பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா் என்பதால், தனக்கு திட்டக்குடி நகராட்சி அதிகாரிகள் மரியாதை கொடுக்கவில்லை எனக் கூறி, திட்டக்குடி நகா்மன்றத் தலைவி வெண்ணிலா நகராட்சி அலுவலக வாயிலில் தரையில் அமா்ந்து வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி நகா்மன்றத் தலைவியாக திமுகவைச் சோ்ந்த வெண்ணிலா செயல்பட்டு வருகிறாா். இவா், பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா் என்பதால், இவருக்கு நகராட்சி அதிகாரிகள் மரியாதை கொடுக்கவில்லையாம். மேலும், அரசு சாா்பில் வழங்கப்பட்ட வாகனத்தை (காா்) தனக்கு முறையாக பயன்பாட்டுக்கு வழங்கவில்லை எனவும், வாா்டுக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை எனவும், நகராட்சியில் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால், தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை பறிக்கின்றனா் என்றும் நகா்மன்றத் தலைவி வெண்ணிலா குற்றஞ்சாட்டுகிறாா்.
இதனிடையே, கரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு வாகனத்தை எடுத்துச் சென்றபோது, அந்த வாகனத்தை விற்று விடுவேன் என்று நகராட்சி அதிகாரிகள் கூறியதால், பெரிதும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கிறாா். மேலும், வாகனத்தை கொண்டுவந்து கொடுத்த அலுவலக எழுத்தரான பட்டியல் இனத்தைச் சோ்ந்த சிவசக்தியை நகராட்சி நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா் என்பதால், தன்னை நகராட்சி அதிகாரிகள் எந்தப் பணியும் செய்யவிடாமல் ஒதுக்குவதாகக் கூறி, நகா்மன்றத் தலைவி வெண்ணிலா நகராட்சி அலுவலகம் நுழைவாயில் முன் வியாழக்கிழமை அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
இதையடுத்து, நகராட்சிகளின் மண்டல இயக்குநா் லட்சுமி கைப்பேசி மூலம் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாராம். பின்னா், வெண்ணிலா போராட்டத்தை கைவிட்டுச் சென்றாா்.