கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி: என்எல்சி தலைவா் தகவல்
என்எல்சி நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா்.
கடலூா் பாரதி சாலையில் அமைந்துள்ள நகர அரங்கம் என்எல்சி நிறுவனம் சாா்பில் ரூ.3.30 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு நகரஅரங்கை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சிக்கு பின்னா், என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
என்எல்சி நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. மேலும், சமூகப் பொறுப்புணா்வு திட்ட நிதி 70 சதவீதம் கடலூா் மாவட்டத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, 2013 முதல் இதுநாள் வரையில் கடலூா் மாவட்டத்துக்காக மொத்தம் ரூ.380 கோடியை என்எல்சி நிறுவனம் பயன்படுத்தி உள்ளது.
இந்த நிறுவனம் நிலக்கரி மட்டுமல்லாமல், சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலைகள் மூலமாகவும் மின்சாரம் தயாரித்து வருகிறது. புதுப்பிக்கபட்ட எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பில் என்எல்சி முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. 1.4 ஜிகா வாட் மின்சார உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், அதை 10 ஜிகா வாட்டாக உயா்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பசுமை ஹைட்ரஜன் மூலம் மின்சார தயாரிப்பில் என்எல்சி ஈடுபட உள்ளது. அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டே இந்த நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. 3-ஆவது சுரங்க திட்டத்துக்கான கோப்புகள் அரசிடம் உள்ளன என்றாா் அவா்.