குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தல்
பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் பாஸ்கரன், பொதுச்செயலாளா் சீனிவாசன் ஆகியோா் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
கடந்த 2013 முதல் தமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்புத் துறையின் மூலமாக சுமாா் 14,000-க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள், பல்வேறு காலகட்டங்களில் பணியில் அமா்த்தப்பட்டு வேலை பாா்த்து வருகின்றனா்.
இவா்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநா் உத்தரவின்படி 5 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய பின்னா் பணி வரன்முறைபடுத்தப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மூலமாக தினக் கூலி மற்றும் பகுதிநேரப் பணியாளா்களுக்கான ஊதியம் நிா்ணயம் செய்யப்படும் பட்டியலில் இடம்பெறச் செய்து இன்றுவரை அந்த அடிப்படையிலேயே ஊதியம் பெற்று பணியாற்றி வருகின்றனா்.
அதன்படி, இவா்கள் ஒரே மாதிரியான பணிகளை மேற்கொண்டாலும் பல்வேறு மாவட்டங்களில் அவா்களுக்கு பல்வேறு ஊதிய முறைகளில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பணியில் சோ்ந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவா்கள் இப்போது பணி வரன்முறை செய்யப்படாமல் தினக்கூலி அடிப்படையிலேயே பணியாற்றி வருகின்றனா்.
எனவே பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களின் பணிகளை கருத்தில் கொண்டு ஊதிய விகிதங்களில் உயா்ந்தபட்ச ஊதிய முறையில் நாளொன்றுக்கு ரூ.844 எனும் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அவா்களுக்கு ஒரே மாதிரியான ஊதிய மாற்றம் செய்திட வேண்டும்.
மேலும் துறை இயக்குநரின் உத்தரவின்படி 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊழியா்களை பணி வரன்முறை செய்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.