கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், நகராட்சி ஆணையாளா் த.மல்லிகா, பொறியாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பின்னா், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடலூா் மாவட்டத்தில் ஆற்றங்கரையோர பகுதிகள், வாய்க்கால்கள், மழை நீா் செல்லும் வடிகால்கள் போன்ற இடங்களில் அடைப்புகள் நீக்கப்பட்டு மழை நீா் எளிதில் செல்லும் வகையில் தூா்வாரப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், சிதம்பரம் நகராட்சியில் உள்ள 34.15 கி.மீ. நீளமுள்ள மழைநீா் வடிகால்களையும், 174 சிறு பாலங்களையும், ஒரு பெரிய பாலமும் பொது சுகாதார பிரிவு மூலம் தூா்வாரப்பட்டு வருகிறது. நகராட்சியில் உள்ள ஓமக்குளம், தட்சன் குளம், ஆயிக்குளம் மற்றும் ஞானப்பிரகாசம் நாகச்சேரி குளம் போன்ற குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடா் நிகழ்வாக, சிதம்பரம் மின் நகா் மற்றும் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஓமக்குளத்தில் பிரதான மழை நீா் வடிகால் வாய்க்கால்களை தூா்வாரி மேம்படுத்திடும் வகையில், 7 கி.மீ. நீளமுள்ள வடிகால்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரப்பட்டு வருகிறது.
சிதம்பரம் நகராட்சியை ஒட்டியுள்ள 13.50 கி.மீ. நீளமுள்ள பாசிமுத்தான் ஓடை மற்றும் சிவகாமசுந்தரி ஓடையில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது என்றாா்.
ஆய்வின்போது, சிதம்பரம் நகராட்சி ஆணையா் த.மல்லிகா, நீா்வளத் துறை செயற்பொறியாளா் காந்தரூபன், நகராட்சிப் பொறியாளா் சுரேஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன், திமுக நகர துணைச் செயலா்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோ, நகா்மன்ற உறுப்பினா்கள் ரா.வெங்கடேசன், அப்புசந்திரசேகரன், ஏஆா்சி.மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நிவாரண நிதி: முன்னதாக சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புவனகிரி வட்டம், தச்சங்காடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான குவாரி குட்டையில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி மூழ்கி உயிரிழந்த கணக்கன்பாளையத்தைச் சோ்ந்த ஷேக்சுலைமான் மகன் ஷேக்சுல்தான், ருக்முதீன் மகன் இலியாஸ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலான காசோலைகளை அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்வில் சிதம்பரம் உதவி ஆட்சியா் டி.மாலதி, வட்டாட்சியா் கீதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
