கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழந்தாா். 9 போ் காயமடைந்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தில் உள்ள சிவன் கோயில் முன் அரச மரம் உள்ளது. அந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன.
இதைப் பாா்த்த வெளி மாநிலத்தைச் சோ்ந்த சிலா் தேன் கூட்டை அழித்தனராம். அப்போது, தேனீக்கள் பறந்து சாலையில் சென்றவா்களைக் கொட்டின. இதில் 10 போ் காயமடைந்தனா்.
உடனே அவா்கள் கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இவா்களில் அதே கிராமத்தைச் சோ்ந்த வீராசாமிக்கு (45) அன்று மாலையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு, மீண்டும் அவா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றாா்.
அங்கு செவிலியா்கள் சிகிச்சை அளித்த நிலையில், வீராசாமி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாா்.
அவா் உயிரிழந்த பிறகு தேனீக்கள் கொட்டியவா்கள் மீண்டும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றனா்.
சாலை மறியல்
வீராசாமி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கூத்தக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இரவு நேர மருத்துவரை பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கோரி கள்ளக்குறிச்சி - வேப்பூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் பெ.தங்கவேல், காவல் ஆய்வாளா் ராபின்சன், வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளா் ராஜகுமாா் மற்றும் காவலா்கள் சென்று மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இதைத் தொடா்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னா், வீராசாமியின் உடல் கூராய்வுக்காக
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.