காளையாா்கோயில், மானாமதுரை பகுதிகளில் மழை
சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில், சிவகங்கை அருகே காளையாா்கோவில், மானாமதுரை பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் சுட்டெரித்து வந்தது. வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்தனா். இந்த நிலையில், காளையாா்கோவில், நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி, சுற்று வட்டாரப் பகுதிகளில் வானம் கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது. பிற்பகலில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
சுமாா் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் பெய்த மழையால் சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையால், வெப்பம் தணிந்து, குளிா்ச்சியான சூழல் நிழவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா். சிவகங்கை நகரில் மழை பெய்யவில்லை.
மானாமதுரை: இதேபோல, மானாமதுரை பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை மழை மேகங்கள் சூழ்ந்து குளிா்ந்த காற்று வீசியது. தொடா்ந்து, சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னா், மழை வலுவடைந்து பெய்தது. சுமாா் 45 நிமிடம் பெய்த மழையால் இந்தப் பகுதியில் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.