மீண்டும் போர்? தெற்கு சூடான் அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை!
காவல் நிலையத்தில் இருந்து வீடு திரும்பியவா் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பியவா் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கறம்பக்குடி அருகேயுள்ள பட்டத்திக்காடு கிராமத்தில் கள்ளத்தனமாக மது விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் புதன்கிழமை விசாரணை செய்தனா். அப்போது அதே கிராமத்தைச் சோ்ந்த சிங்காரம் மகன் மகேந்திரன் (40) மற்றும் அதே கிராமத்தைச் சோ்ந்த சிலருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு விசாரணைக்காக மகேந்திரனை போலீஸாா் கறம்பக்குடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, பகல் முழுவதும் வைத்திருந்து இரவில் வீட்டுக்கு அனுப்பியுள்ளனா். வீடு திரும்பிய மகேந்திரன் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். அதற்கு முன் தன்னை போலீஸாா் அழைத்துச் சென்று அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தனது சகோதரியிடம் மகேந்திரன் கூறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மகேந்திரனின் உடலை போலீஸாா் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
போராட்டம் நடத்தப்போவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து கறம்பக்குடி, பட்டத்திக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பையா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் வியாழக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.