ஐபிஎல்லில் விளையாடுவது சர்வதேச வீரர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்! - திலக் வர...
காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை: பாகிஸ்தான்
காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் எந்த சூழலிலும் பயங்கரவாதத்தை ஆதரிக்காது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ’லஷ்கர்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ’தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில், தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது:
”மக்கள் தங்கள் உரிமைகளை கேட்கிறார்கள். இந்துத்துவ சக்திகள் மக்களை சுரண்டி வருகின்றன. சிறுபான்மையினரை அடக்குகிறார்கள். கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள் சுரண்டப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். அதனால்தான் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
இந்த சம்பவத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எந்த சூழலிலும் நாங்கள் எங்கும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. மேலும், எந்த மோதலிலும் அப்பாவி மக்கள் இலக்காகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
பயங்கரவாதிகள் அல்லாதவர்களை குறிவைப்பதை எங்களின் தேசியக் கொள்கை அனுமதிக்காது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், உரிமைகளைக் கேட்கும் இந்தியர்களுக்கு எதிராக ராணுவம் அல்லது காவல்துறை அட்டூழியம் செய்கிறது. அடிப்படை உரிமைகூட இல்லை. அவர்கள் ஆயுதம் ஏந்தினால், பாகிஸ்தானை எளிதில் குறை கூறுகிறார்கள்.
பாகிஸ்தானுக்குள் அமைதியின்மையை ஏற்படுத்த இந்தியா உடந்தையாக இருப்பதை பல சந்தர்ப்பங்களில் ஆதாரத்துடன் நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.