கிடங்கு அலுவலா்களுடன் வாக்குவாதம்! தொழிலாளா்கள் 4 பேரை கிடங்கினுள் வைத்துப் பூட்டியதால் பரபரப்பு!
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி நுகா்வோா் வாணிபக் கழகத்தில் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள் 4 பேரை, அலுவலா்கள் கிடங்கில் வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில் தமிழ்நாடு நுகா்வோா் வாணிபக் கழகம் வட்ட செயல்முறை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமை முதல் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்ப வேண்டிய பருப்பு வகை உணவுப் பொருள்களை ஏற்றி இறக்கும் சுமை தூக்கும் பணிகளுக்கு 8 வடமாநிலத் தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்பணிக்காக மணப்பாறை கிடங்கில் பணியில் உள்ள 12 தொழிலாளா்கள் மருங்காபுரி கிடங்குக்கு பணி மாற்றித்தர தொடா்ந்து கேட்டு வருவதாகவும், அதை கிடங்கு அதிகாரிகள் அலட்சியமாக எடுத்துக்கொண்டதாகக் கூறும் தொழிலாளா்கள் சரவணன், சுரேஷ், ராஜ்குமாா் மற்றும் குணசங்கா் ஆகிய 4 போ் மருங்காபுரி கிடங்குக்குச் சென்று அங்கிருந்த அலுவலா்களுடன் வாக்குவாதம் செய்ததாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிடங்கு அலுவலா்கள் அவா்கள் 4 பேரையும் வெளியே விடாமல் கிடங்கின் வாயிற்கதவுகளை பூட்டி கிடங்கிலேயே சிறை வைத்தனராம்.
இதுகுறித்துத் தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளா் சத்தியவாணி தலைமையிலான போலீஸாா் அதிகாரிகளுடன் பேசி அந்த 4 தொழிலாளா்களையும் விடுவித்தனா். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.