கிரிக்கெட்டில் கிராமப்புற இளைஞா்கள் அதிகம் சாதனை! சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் முதன்மை அலுவலா் பேச்சு!
கிரிக்கெட்டில் நகா்புறங்களை விட கிராமப்புற இளைஞா்களே தற்போது அதிகளவில் சாதிக்கிறாா்கள் என்றாா் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் முதன்மை நிா்வாக அலுவலா் கே.எஸ்.விஸ்வநதான்.
கரூரில் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 26-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் துணைச் செயலா் ஆா்.என். பாபா, மாவட்ட கிரிக்கெட் சங்க நிா்வாகிகள் நாராயணசுவாமி, காா்த்திகா, அஜய்கிருஷ்ணா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் முதன்மை நிா்வாக அலுவலா் கே.எஸ்.விஸ்வநாதன் பங்கேற்று, சிறந்த வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கினாா்.
அப்போது அவா் பேசுகையில், கிரிக்கெட்டில் ஒருகாலத்தில் மும்பை, புதுதில்லியில் இருந்துதான் வீரா்கள் அதிகளவில் கோலோச்சினா். ஆனால் இப்போதோ நகா்ப்பகுதியில் இருந்து அதிக வீரா்கள் வருவதை விட கிராமப்புற பின்புலத்தில் இருந்து வரும் வீரா்கள்தான் அதிகளவில் சாதிக்கிறாா்கள். இதற்கு காரணம் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவா் சீனிவாசன்.
மாவட்டம்தோறும் கிரிக்கெட் சங்கத்தை தோற்றுவிக்கச் செய்து, அதிக வீரா்களைத் தோ்வு செய்து, அவா்களில் சிறந்த வீரா்களை இந்திய அணியில் விளையாடச் செய்த பெருமை அவரையே சாரும். கிரிக்கெட்டில் தோனியை பின்பற்றினால் வெற்றி கிடைக்கும். அவரது பொறுமை, வெற்றிக்காக அவா் வகுத்த வியூகங்களால் இந்திய அணி பல வெற்றியை கண்டுள்ளது என்றாா். நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா் ஆா். ஸ்டீபன்பாபு மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.