சேலம்: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை; வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்... அல்லல்பட...
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரிக்கு நிவாரண நிதி எப்போது?
ஃபென்ஜால் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர்கள் விவரங்களை அனுப்பி வைத்ததும், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு அதற்கேற்ப நிவாரண நிதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபென்ஜால் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய ஃபென்ஜால் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெறப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.
இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில் இன்று (3-12-2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது:
புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 இலட்சம் ரூபாய் வழங்கிடவும்;
சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கிடவும்;
முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும்,
மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும்;
பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500/- வழங்கிடவும்;
மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/-ஆக வழங்கிடவும்;
எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500/-ஆக வழங்கிடவும்;
வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000/- வழங்கிடவும்; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100/- வழங்கிடவும்;
அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும்;
நிவாரணம் வழங்குவது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
எனவே, இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு நிவாரண நிதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.