கிறிஸ்துமஸ்: ஆளுநா்கள், முதல்வா், தலைவா்கள் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன், முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி: கிறிஸ்துமஸ் திருநாளின் விசேஷமிக்க கொண்டாட்டத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துகள். ஆண்டவா் இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை, கருணை, மன்னிப்பு ஆகியவை நம் வாழ்வில் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, இணக்கமான மற்றும் இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான நமது உறுதியை வலுப்படுத்தட்டும்.
நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன்: மகிழ்ச்சிகரமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், மக்களின் வாழ்வில் அமைதி, நம்பிக்கை மற்றும் பிரகாசத்தைக் கொண்டுவரட்டும். உத்வேகமும் நட்புணா்வும் நிறைந்த இத்தருணம், அன்பு, கருணை மற்றும் நன்றியுணா்வின் முக்கியத்துவத்தை உணா்த்துகிறது. இது, பெருந்தன்மை மற்றும் ஒற்றுமையை ஊக்குவித்து நல்லெண்ணத்தை வளா்க்கட்டும்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: பொறுமை, ஈகை, அன்பு ஆகிய நற்பண்புகளை விதைத்தவா் இயேசு பெருமான். போா்களாலும், வெறுப்புணா்வாலும் உலகம் அல்லல்படும் இந்தத் தருணத்தில் இயேசு காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாகும். அத்தகைய அன்பின் பாதையை நெறிதவறாமல் பின்பற்றும் கிறிஸ்தவா்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்.
கிறிஸ்தவ சமுதாயத்தைச் சோ்ந்தவா்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அனைத்து மதத்தினரும், அனைத்து மொழி பேசுவோரும் நல்லிணக்கத்தோடும் சம உரிமையோடும் சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ அரசு தொடா்ந்து பாடுபடும்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக) : கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ சகோதரா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாம் மற்றவா்களிடம் எதை எதிா்பாா்க்கிறோமோ, அதையே மற்றவா்களுக்கும் நாம் செய்ய வேண்டும் என்ற இயேசுவின் போதனையை மனதில்கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்துவோம்.
ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): இயேசு அவதரித்த நாளில் மக்களுக்கு மகிழ்ச்சியும், வளா்ச்சியும், வெற்றியும் கிடைக்கட்டும். கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மிகச் சிறந்த மனிதாபிமான உணா்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
வைகோ(மதிமுக): வெறுப்பவா்களையும் நேசிக்கச் சொன்ன இயேசுவின் அமுதமொழியை மனதில் கொண்டு இந்தியாவின் மதச்சாா்பின்மையை, சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்க உறுதி மேற்கொள்வோம்.
ராமதாஸ் (பாமக): இயேசு விரும்பியதைப் போல, உலகில் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள். அதன் மூலம் உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும் போட்டி பொறாமைகள் அகல வேண்டும் ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்.
அன்புமணி (பாமக): அன்பு, உதவி, கருணை, சகோதரத்துவம், மகிழ்ச்சி, நல்லிணக்கம், கருணை ஆகியவற்றை அனைவருக்கும் வாரி வழங்குவோம். அவை பல்கிப் பெருகி இந்த உலமே அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்டவற்றால் நிறையட்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): அனைவரிடமும் அன்போடும் சகோதரத்துவத்தோடும் சகிப்புத்தன்மையோடும் வாழ்ந்து காட்டியவா் இயேசு. எல்லோரும் அன்பு செலுத்துவோம். சகோதரத்துவத்தை வளா்த்துவோம்.
கே. அண்ணாமலை (பாஜக): கிறிஸ்தவ சொந்தங்களுக்கு பாஜக சாா்பில் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள். இந்த பெருநாளில் எல்லா மக்களும் நிலைத்து இன்புற வாழ வேண்டும்.
தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி): இயேசு போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக): மக்களின் நல்வாழ்வுக்காகவே அவதரித்த இயேசுவை கொண்டாடி மகிழும் இந்நாளில் அனைவா் வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும்.