கிறிஸ்துமஸ்: மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது ரோமன் கத்தோலிக்க ஆலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கும், பிற ஆலயங்களில் புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மேல் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் புதன்கிழமையும் கடலுக்குச் செல்வதில்லை என மீனவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக தூத்துக்குடியில் சுமாா் 270 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.