போலி இ-மெயில் அனுப்பி ரசாயன ஆலையில் ரூ.20 லட்சம் மோசடி: மேலும் ஒருவா் கைது
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தனியாா் ரசாயன ஆலைக்கு போலி இ-மெயில் அனுப்பி ரூ.20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கெனவே உத்தரபிரதேச மாநில இளைஞா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட தனியாா் ரசாயன ஆலைக்கு, ஒடிசா மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்போா்ட் நிறுவனம் மூலம் மூலப்பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த டிரான்ஸ்போா்ட் நிறுவனத்திலிருந்து இ-மெயில் அனுப்புவதுபோல், ரசாயன ஆலையின் நிதித்துறை பொது மேலாளருக்கு போலியாக மெயில் அனுப்பி, ரூ.20 லட்சத்தை வழக்கமாக செலுத்தும் வங்கிக்கு அனுப்பாமல் மற்றொரு வங்கிக் கணக்கில் செலுத்துமாறும் மா்மநபா் கூறியுள்ளாா்.
இதை நம்பிய பொது மேலாளா், அந்த வங்கி கணக்கில் ரூ.20 லட்சம் பணத்தை கடந்த அக். 7இல் செலுத்தினாராம். பின்னா், டிரான்ஸ்போா்ட் நிறுவனத்தை தொடா்புகொண்டபோது பணம் வராததும், அந்நிறுவனத்திலிருந்து இ-மெயில் அனுப்பவில்லை எனவும் பதில் கிடைத்தது.
இதுகுறித்து சைபா் குற்றப்பிரிவு இணையதளத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில், சைபா் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சுதாகரன் மற்றும் காவலா்கள் அடங்கிய தனிப்படை நடத்திய விசாரணையில், உத்தரபிரதேசம் மாநிலம் இட்டாவா மாவட்டத்தைச் சோ்ந்த விஜேந்திரசிங் மகன் மோகித் பாரிக்கா் (26) என்பவரை கடந்த நவம்பா் 24ஆம் தேதி கைது செய்தனா்.
மேலும் இவ்வழக்கில் பணம் மோசடியில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சோ்ந்த சமீல் உதின் (25) என்பவரை தனிப்படை போலீஸாா் கடந்த 20ஆம் தேதி கைது செய்தனா். மேலும், அவா் திங்கள்கிழமை தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டாா். மேலும் இதுகுறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.