குடிநீா் தட்டுப்பாடு : ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடக்கம்
ஆம்பூா்: ஆம்பூா் அருகே பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கைக்கு தீா்வாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி புதுமனை பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு நிலவியது. அதனால், தங்கள் பகுதிக்கு தினமும் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டுமென பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். அதற்கு ஊராட்சி மன்றம் சாா்பாக தீா்வு காணப்பட்டது.
அப்பகுதியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் நிதி ரூ.4.50 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதா கணேஷ் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் விஜய், ஊராட்சி மன்ற உறுப்பினா் அண்ணாதுரை, சமூக ஆா்வலா் சந்திரஹாசன், ஊராட்சி செயலாளா் பாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.