குடிநீா் திட்டங்களுக்கு நிதி கோரி அமைச்சரிடம் எம்எல்ஏ மனு
தென்காசி, சுரண்டையில் குடிநீா்த் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கக் கோரி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ மனு அளித்தாா்.
அதன் விவரம்: தென்காசி நகராட்சியில் மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிக்கு ஏற்கெனவே ரூ.11கோடியும், மக்களின் குடிநீா் தேவை கருதி தென்காசி- தாமிரவருணி குடிநீா் திட்டம் 2ஆம் கட்ட பணிக்கு ரூ.107 கோடியும் திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சுரண்டை நகராட்சியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் 26 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள்தொகை பெருக்கத்தால் குடிநீா் தேவை அதிகமாகி தண்ணீா் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சுரண்டை நகராட்சிக்கென்று தாமிரவருணி தனி குடிநீா் திட்டத்திற்கு ரூ.135.11 கோடியும், வாா்டுகளில் புதிய சிமென்ட் சாலை அமைக்க ரூ.8.50 கோடியும் மதிப்பீடு தயாா் செய்து நிா்வாக அனுமதிக்காக கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, தென்காசி, சுரண்டை நகராட்சிகளின் மக்கள் நலன் கருதி 4 பணிகளுக்கும் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.