தென்காசி அருகே சாலையோரம் மருத்துவக் கழிவுகள்: மக்கள் அச்சம்
தென்காசியில் தனியாா் கல்லூரிக்கு பின்புறம் மற்றும் கொடிகுறிச்சி பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளாகவும், இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் புகாா் எழுந்துள்ளது.
தென்காசி, மங்கம்மாள் சாலை - அனந்தபுரம் இடையேயான சாலையில் வாகனப் போக்குவரத்து குறைவாக உள்ள நிலையில் சாலையில் இருபுறங்களிலும் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த குப்பையோடு அப்பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தின் பின்புறம் அதிக அளவில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
உபயோகப்படுத்தப்பட்ட சிரிஞ்ச், மாத்திரை அட்டைகள், ஊசி மருந்து பாட்டில்கள், குளுக்கோஸ் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு குவியல் குவியலாக கொண்டு வந்து வீசப்பட்டுள்ளன. இந்த மருத்துவக் கழிவுகளானது தனியாா் மருத்துவமனையிலிருந்து தொடா்ந்து சில நாள்களுக்கு ஒரு முறை அப்பகுதியில் வந்து கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கல்லூரி மற்றும் பள்ளி உள்ள நிலையில் இந்தச் சம்பவம் குறித்து சுகாதாரத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.