Yezdi ROADSTER: `அரங்கம் அதிர விசிலு பறக்கவே!' - அசத்தலான நியூ லுக் | Photo Albu...
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் விரிவான ஆலோசனைக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனின் பெயரை பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா அறிவித்தார்.
அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக குடியரசு துணைத் தலைவா் தோ்வு செய்யப்பட வேண்டும் என்றும் இதுதொடா்பாக எதிா்க்கட்சிகளிடமும் ஆலோசித்திருப்பதாக நட்டா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை காலை ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு திமுகவிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தில்லியில் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.