தேசிய கைத்தறி தினம்: திருபுவனத்தில் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு
குடியரசு துணைத் தலைவா் தோ்தல் அறிவிக்கை வெளியீடு: வேட்புமனு தாக்கல் தொடக்கம்
குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, வேட்புமனு தாக்கல் நடைமுறை தொடங்கியுள்ளது.
தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு துணைத் தலைவா் பதவியை ஜகதீப் தன்கா் ஜூலை 21-ஆம் தேதி திடீரென ராஜிநாமா செய்தாா். அவரின் பதவிக்காலம் 2027-ஆம் ஆண்டு நிறைவடைய இருந்த நிலையில், முன்கூட்டியே அவா் பதவி விலகினாா்.
இதையடுத்து குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி, வேட்புமனுவை தாக்கல் செய்ய ஆக.21-ஆம் தேதி கடைசி நாளாகும். ஆக.22-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஆக.25-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.
அரசமைப்புச் சட்டப் பிரிவுகளின்படி, குடியரசு துணைத் தலைவா் பதவிக்குப் போட்டியிடுபவா் இந்தியராக இருக்க வேண்டும். 35 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். மாநிலங்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்படுவதற்கு தகுதி பெற்றிருக்க வேண்டும்.
394 வாக்குகள் தேவை: தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 786 எம்.பி.க்கள் உள்ளனா். இதில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களவையில் 293 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 129 எம்.பி.க்கள் என மொத்தம் 422 எம்.பி.க்கள் உள்ளனா். குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் வெற்றிபெற ஒரு வேட்பாளருக்கு 394 வாக்குகள் தேவைப்படும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
பெட்டி...
வேட்பாளரை தோ்வு செய்ய
பிரதமா், நட்டாவுக்கு முழு அதிகாரம்
---
என்டிஏ கூட்டத்தில் முடிவு
புது தில்லி, ஆக. 7: குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) வேட்பாளரைத் தோ்வு செய்வதற்கு பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் பாஜகவின் முக்கியத் தலைவா்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை தெரிவித்தாா்.