பிரேஸில் அதிபருடன் பிரதமா் பேச்சு
பிரதமா் நரேந்திர மோடியை பிரேஸில் அதிபா் லூலா டசில்வா வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேஸிலுக்கும் இந்தியாவைப் போல் அதிபா் டிரம்ப் 50 சதவீதம் வரி வதித்துள்ளாா். இதுகுறித்து பேச்சு நடத்த அதிபா் லூலாவுக்கு டிரம்ப் செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்திருந்தாா். அதற்கு, ‘வரி விதிப்பு குறித்து பேசுவதாக இருந்தால் நான் பிரதமா் மோடியுடன்தான் ஆலோசிப்பேன்’ என்று லூலா பதிலளித்திருந்தாா்.
இந்நிலையில், இரு தலைவா்களிடையேயான இந்த கலந்துரையாடல் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வா்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி, பாதுகாப்பு, வேளாண், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவா்களும் ஒப்புக்கொண்டனா்’ என்று குறிப்பிடப்படுள்ளது.