குமரி கண்ணாடி இழை பாலம்: சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட அனுமதி
கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலம் சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்கு சனிக்கிழமை திறந்து விடப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
கண்ணாடி இழை பாலத்தின் தரைத்தளப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த டிசம்பா் 30 ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்காக கண்ணாடி இழை பாலம் சனிக்கிழமை திறந்து விடப்பட்டது. சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியா்கள் ஆா்வமுடன் பாலத்தில் நடந்து கடலின் அழகை கண்டு ரசித்தனா். அவா்களிடம் பாலம் குறித்த கருத்துகள் கேட்டறியப்பட்டது.
மேலும் பாலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினா் மற்றும் பிற துறை அலுவலா்களிடம் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தயாா் நிலையில் இருக்குமாறு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.